ஞாயிறு, 22 நவம்பர், 2020

சோறூட்டுகிறாள் தாய்


வருவோர் போவோர் எல்லாம்
வழிப்பறிக்காரன் என்றாள்
சோறூட்டும் தாய்

தூண்டில்


மீனிற்கு ஆசைபட்டான் மனிதன்
புழுவிற்கு ஆசைபட்டது மீன்
எதற்கு ஆசைபட்டது புழு

சனி, 25 ஏப்ரல், 2020

தமிழ் தமிழ் என்று சொல்லியே...


துரோகங்களும் கண்ணீருமே
வாழ்க்கையின்
நிகழ்வுகளாய் ஆனபின்பு
ஏமாற்றியவனின் வளமும் செழிப்பும்
ஏமாந்தவனின் வலியும் கோபமும்-ஒன்றாய்
இருக்கமுடிவதேயில்லை...

நான் – நாங்கள் தமிழால்
ஏமாற்றபட்டவர்களின் கூட்டம்
நீங்கள் தமிழைச் சொல்லியே
ஏமாற்றியவர்களின் கூட்டம்
அன்று முதல் இன்று வரை
அதிகாரம் உங்களிடம்
அழுகையும் அவலமும் எங்களிடம்...

அம்பெடுத்து வில் தொடுத்த
ஏகலைவனின் கட்டைவிரலாய்
சொல்லெடுத்து கவிதொடுத்த
நந்தனின் சாம்பலாய்
கடுந்தவத்தால்
கொடும்வாளுக்கு பலியான
சம்பூகனனின் தலையாய்
நாங்கள் வருகிறோம்-உங்கள்
அதிகார அழுக்கு மூட்டைகளை
அடித்து துவைக்க
நாங்கள் வருகிறோம்

எத்தனை எத்தனை காரணங்கள்
எங்களை சுரண்டுவதில் மட்டும்
மதத்தை சொல்லி..
சதியைச் சொல்லி..
சுரண்டியது மட்டும் போதாதோ..
தமிழ் தமிழ் என்று சொல்லியே-எம்
தன்மானத்தையும் தமிழகத்தையும்
சுரண்டும் கூட்டமே
நாங்கள் வருகிறோம்
நாங்கள் வருகிறோம்
செந்தமிழ் வாளெடுத்து
தீந்தமிழ் சொல்லெடுத்து
நாங்கள் வருகிறோம்...

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்தகுடி தமிழ்குடி யென்ற
சான்றோன் வீட்டு குழந்தைகள்-நாங்கள்.
தமிழ் தமிழ் என்று சொல்லியே
தமிழையும் தமிழனையும்
அழித்த கூட்டம் நீங்கள்...
இந்தி வேண்டாமென்று
இங்கிலீசை வளர்த்தவர்களே
திராவிடம் பேசி பேசியே
தீந்தமிழை அழித்தவர்களே
தாளமுத்துவும் நடராசனும்
சிறைக்கொட்டடியில் வீழ்ந்தபோது
கண்ணீர் துளிகளே
கண்ணீர் துளிகளே யென்று
கவிதை பாடி கன்னித் தமிழை
கண்ணென காப்போம்மென்று
சாம்பல் மீது
சத்தியம் செய்த உத்தமர்களே
இறந்தவர் மீண்டுவருவாரோயென்று
இருந்துவிட்டீரோ இல்லை-எங்களை
மறந்துவிட்டீரோ?...

தமிழை காப்பதாய் நீங்கள் வடித்த
நீலி கண்ணீரில் ஏமாந்த
கூட்டத்தின் வாரிசுகள் நாங்கள்
கழகத்தை வளத்தெடுக்க
கறுப்புக்கொடி ஏற்ற சொன்னீர்கள்
குடியரசு தினத்தை
கறுப்பு தினமாக அறிவிப்பு செய்தீர்கள்
நம்பினோம்.. நம்பினோம்-உங்களை தானே
நம்பினோம்-தமிழால்
கட்டுண்ட எங்களை
கழுத்தறுப்பீர்களென்று
கனவிலும் நினைக்கவில்லை...

உங்கள் சுயநல சாட்டையால்
சுழற்றிவிடப்பட்ட பம்பரமாய்
சுற்றி சுற்றி வந்தோம்
அரியணை ஆசையில்-நிங்கள்
பற்ற வைத்த நெருப்புக்கு
நாங்கள் திரியானோம்
வெந்து தணிந்தது எங்கள் உடல்
கொளுந்துவிட்டு எரிந்தது
இந்தி எதிர்ப்புக் குரல்
மாணவர்களின் ரத்தத்தில்
மக்களின் வியர்வையில்
செழித்து வளர்ந்தது கழகம்...

ஆட்சி வந்தது அரியணை வந்தது
அதிகாரம் வந்தது-ஆனால்
அன்னைத்தமிழ் மட்டும் மறந்துபோனதோ
அண்ணனை நம்பினோம்
அண்ணனின் தம்பியை நம்பினோம்
ரத்தங்களை நம்பினோம்
ரத்தத்தின் ரத்தங்களை நம்பினோம்
திராவிடம் பேசியது
திருடத்தானென்று
கண்டுகொண்டோம்

வள்ளுவனையும் கம்பனையும்
கற்றுக்கொண்டு
புறநானூற்றையும் அகநானூற்றையும்
எடுத்துச் சொல்லி
கம்ப்யூட்டர் காலத்திலும்
கடிதம் எழுதும் தலைவரே
திராவிட இயக்கத்தின் தற்கால முதல்வரே
சங்கம் வைத்து வளர்த்த
தமிழைச் சொல்லி-தன்
அங்கம் வளர்ப்பது நியாயம் தானோ...
ஆட்சி மொழியாய் தமிழ் இல்லை
அலுவல் மொழியாய் தமிழ் இல்லை
இந்தியை ஏதிர்த்தது-ஆங்கிலம்
வளர்க்கத்தானோ இல்லை
அரியணை பிடிக்கத்தனோ...

எம் தேசத்து மொழியை-நீச
பாசையென்றும்
தீண்டாத மொழியென்றும்
ஆலய சுவர்களுக்கு வெளியே
தள்ளிவைக்கையில்-எம்
மொழிக்கு கொல்லிவைக்கையில்
எங்கே போனது-உங்கள்
தமிழ் உண்ர்வு...
நந்தன் நடந்த பாதையை
திறக்காத நீங்களா-நற்றழிழை
ஆலய மொழியாக
அரியணை ஏற்றபோகிறீர்கள்...

ஊர் பெயரை மாற்றுவதற்காக
தண்டவாளத்தில் தலைகொடுத்தவரே-உங்கள்
உரத்துறை தடுமாறும்போது
ஊமையாய் மாறிப்போனது ஏனோ?
ஆலயத்தில் மட்டுமா-நாடாளும்
அவையிலும் அல்லவோ
அன்னைத்தமிழ் அரியணை ஏறவில்லை...

இலக்கிய நூல்கள் எல்லாம் உங்கள்
இல்லத்து அலமாரிகளை
அலங்கரித்தது போதும்
புறநானூறும் அகநானூறும்
கூட்டம் சேர்க்கவும்-பிறர்
குறை சொல்லவும் பாடியது போதும்
மண்ணின் இலக்கியத்தை
மக்களுக்கு கொடுங்கள்...

தமிழ் மொழியல்ல...
தமிழ் மொழி மட்டுமேயல்ல
எங்கள் உணர்வு..
எங்கள் பண்பாடு
எங்கள் வாழ்க்கை
உங்கள் பேரக்குழந்தைகள் வேண்டுமானால்
இந்தியும் இங்கிலீசும் காக்க
களம் காணட்டும்-நாங்கள்
தமிழையும் தமிழரையும் காப்போம்...
தமிழ் மொழியே
செம்மொழியென்று
உரக்கச் சொன்ன
தமிழ் தாத்தாவை எங்களுக்கு தெரியும்
மொழிக்கான போரை முன்னெடுத்த
சங்கரலிங்கனாரை எங்களுக்கு தெரியும்
மக்கள் சபைகளிலும்
மன்ற அவைகளிலும் தமிழில் முழங்கிய
பொதுவுடமைவாதிகளை
எங்களுக்கு தெரியும்-ஆனால்
தமிழ் இனம் அழித்து
தன் குலம் வளர்க்கும் தலைவரே
நாங்கள் நெருப்பாற்றில் நீந்தி
உதிரச்சகதியில் குளித்தது-தமிழ்
இனம் வளர்க்கவா-இல்லை
உங்கள் குலம் செழிக்கவா

புறநானூற்று தமிழனையும்
கண்ணகி கால்சிலம்பையும்
வள்ளுவனின் குறலையும்
பாடிக்காட்டி
படம்காட்டி
நாட்கள் எண்ணப்படும்போதும்
நாற்காலிக்கு ஆசைப்படும்
தமிழ் இனத்தலைவரே
இலங்கையில் மலேயாவில்
சிங்கப்பூரில்
தமிழ் ஆட்சிமொழி அலுவல்மொழி
தமிழ்நாட்டில் எந்தமொழி
ஆட்சிமொழி பதில்சொல்வீரா...
சாமானியனின் குரல்
தமிழின் கூரல்
நீதித்துறையில் உண்டா
கேட்ட பதவிக்காய்-டெல்லி
கோட்டையில் போர்தொடுக்கும்
தன்மான தலைவரே-எம்
பண்பாட்டு மொழிக்காய்
பயன்பாட்டு மொழிக்காய்
படை நடத்த தயாரா....?

வாலியையும் வைரமுத்துவையும்-தன்
அரசவைக் கவிஞர்களாய் மாற்றி
புகழ் பாட கேட்டு
அகம் மகிழும் நிகழ்கால மன்னரே
கண்ணை பறிக்கும் கண்கவர் விளக்குகள்
குளு குளு அறைகள் என
கோடி கோடியாய்
கோவையிலே கொட்டி
மாநாடு நடத்தி மக்களின் வரிப்பணம்
வாரி இறைத்த வள்ளலே
நீர் நடத்திய மாநாடு
கனிமொழிக்கா-இல்லை
தமிழ் மொழிக்கா..?

உங்கள் குடும்ப நலன் காக்க
அதிகார குணம் காக்க
அவதார புருசனாய்
அரிதாரம் பூசிய
அன்புத்தலைவனே-எம்
ஈழத்து சொந்தங்களின்
ரத்த நாளங்கள் உடைபட்ட போது
முள்வேலிகளுக்குள் அடைபட்டபோது
அமைதி காத்தது ஏனோ..?
சிங்கள அரசும்-நீரும்
ஒன்றுதானே
இனத்தை அழிப்பதிலும்
வயிற்றில் அடிப்பதிலும் யென்று
அமைதி காத்தீரோ...
போதும் போதும்
தமிழைச் சொல்லி சொல்லியே
எங்களை தூண்டிவிட்டது-நீங்கள்
பன்னீரில் குளிக்க-நாங்கள்
நெருப்பில் குளித்தது போதும்
தமிழ் இனம் காப்போம் என்று சொல்லி
கழுத்தறுத்தது போதும்...

கறுப்பு மறைந்து
கறுப்பு சிவப்பாய் மாறி
மஞ்சளுக்கு வந்தவரே
சிவப்பு மலரும்போது
சிம்மாசனத்தில் தமிழ் இருக்கும்
சிறைகளில் வேண்டுமானால்
உங்கள் கூட்டம் இருக்கும்
    -கு.செந்தில் ராஜா, மதுரை
(2010 த.மு.எ.க.ச நாகமலை கலைஇரவில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை)

முதியோர் இல்லம்


















பேசக் கற்றுகொடுத்த அம்மா
ஊமையாகி போனாள்
முதியோர் இல்லம்  வந்த மகனிடம்...

சோறூட்டுகிறாள் தாய்

வருவோர் போவோர் எல்லாம் வழிப்பறிக்காரன் என்றாள் சோறூட்டும் தாய்