சனி, 20 அக்டோபர், 2012

எச்சங்கள் அற்ற உறவு



அலுவலக பணிமுடித்து 
அசதியாய் வீடு வருகையில் 
அப்பா வென கத்திக்கொண்டே
தள்ளாடி வரும்
பிள்ளையின் கைப்பிடித்து
ஆசை முத்தமிட்டு
கெஞ்சி கெஞ்சி பேசும்
கொஞ்சுத்தமிழ் கேட்டு
மார்போடு அணைக்கையில்-நானும்
குழந்தையாகிப்போனேன்...

அப்பாவ அடி’ அன்புமனைவி
தனதாசை சொல்ல
பிஞ்சு விரலில் உனை
கொஞ்சும் முகத்தினில்-நீ
அறையும் வேளைகளில்
மயிலிறகாய் எனைத்தழுவும் விரல்கள்
இன்னுமொருமுறை
தீண்டாதோவென ஏங்கித்தவிக்கிறது...

அவசரகதியில் அலுவலகம்
புறப்படும் நேரத்தில்-கையில்
அகப்பட்ட பை எடுத்து
அப்பா நானு என்று
அடம்பிடிக்கும் போதெல்லாம்
சாமர்த்தியமாய் கதை சொல்லி
சளனமற்று நழுவுகையில்
கண்ணீர் வழிந்தோட
அழுதுபுரளும்-உன்
தினசரி நிகழ்வுகளில்
கண்ணீரில் பூக்கின்ற
மெல்லிய புன்னகையாய்
வார்த்தைகளற்று போகின்றது
சந்தோசத்தின் வரிகள்...

வெள்ளையாய் காகிதம் கிழித்து
மெல்லிய குழலாய் உருட்டி
புகைத்துக் காட்டும்போதுதான்
நெருப்பற்ற காகிததுண்டில்
சூடுபட்டு போகின்றது
சிகரெட் பிடித்த உதடும்
பொறுப்பற்ற தவறும்...

மனைவியோடு கோபம்கொண்டு
குழாயடிச் சண்டையாய்
வார்த்தைகள் நீண்டு
ஆத்திரத்தில் அசுரமுகமெடுக்கையில்
அச்சத்தில் நடுநடுங்கி
வீறிட்டு அழும் உன் குரலில்
வீதிக்கு போகாமல்
முடங்கிப்போகின்றது
அன்பற்ற செய்கையும்
மூர்க்கமாண வார்த்தைகளும்...
குடும்ப சச்சரவுகளின் தீர்வுமையமாய்
மாறிப்போகின்றது உனது இருப்பு...

அண்டை வீட்டுக்காரனோடு
சண்டையிட்ட நாட்கள்
மறந்துபோன பின்பும்
ஆறாத வடுவாய்
முறைத்துக்கொண்டு திரிகையில்-நேற்று
சண்டையிட்ட பிள்ளையோடு
ஒற்றை மிட்டாயை
பகிர்ந்துண்ணும் பழக்கம் கண்டு
பெரியவர்கள் நாமென்று
நினைத்த நொடிகள்
வெட்கத்தில் நாணி சிவக்கிறது...

பொய்மை நிறைந்த முகம்
நேர்மையற்ற வார்த்தைகள்
பொறாமை வழியும் வாழ்க்கை
வஞ்சகம் சூழ் மனதுயென
எங்கும் நிறைந்திருக்கும்-மனித
எச்சங்கள் எதுவுமற்று கிடக்கிறது
குழந்தைகளுக்கும்
நமக்குமான உறவுகளில்....

சோறூட்டுகிறாள் தாய்

வருவோர் போவோர் எல்லாம் வழிப்பறிக்காரன் என்றாள் சோறூட்டும் தாய்