புதன், 28 செப்டம்பர், 2016

நிராகரிப்பின் வலி


நிராகரிக்கப்படாத வரையில்
உணரவே முடிவதில்லை-எப்போதும்
உணர்கின்றேன்
நிராகரிப்பின் வலியை...

படிப்புக்காய் வாங்கிய கடனுக்காக
வாசலில் வந்து
வட்டிக்கடைக்காரன்
கொட்டிவிட்டு போகும்
வசவுகளையோ...
ஏளனப்பார்வையோடு
கேலி பேசும் சுற்றத்தாரையோ
ஒருமுறையேனும்சந்தித்திருப்பீர்களா...

தண்டச்சோறு
வெட்டிப்பயல் என்று
படித்து வாங்காத பட்டங்களோடு
வெறுமை கலந்த மனங்களில்
சுயம் மறந்த நினைவுகளோடு
முரட்டுச்சாலைகளில்
இருட்டிய
மனங்களோடு நடந்ததுண்டா..

மயிர் செரைக்க
அறுந்துபோன செருப்புதைக்க
டீ குடிக்க என
அன்றாட தேவைகளுக்கே
கையேந்தும் நிலையெண்ணி
இரவு படுக்கையை
சத்தமின்றி அழுகையால் நனைத்த
அனுபவம் உண்டா...

இரவெல்லாம் கண்விழித்து படித்தும்
இண்டர்வியூ சரியாய் செய்தும்
முன் அனுபவமும்
சலவை செய்தகாந்தி நோட்டுக்களும்கேட்டு
நிராகரிக்கப்பட்டு
வீடு திரும்புகையில்
இதுவும்கிடைக்கவில்லையா? யென்று
பெற்ற மனது துடிக்கும்வலியை
உள்ளூர உணர்ந்ததுண்டா...

நண்பர்களோடு சிரித்துபேச
பெற்றோர் மடிஉறங்கி
நிம்மதி மூச்சிறங்க
என்றோஒரு நாள்ஓரு வேளை
வாழ்க்கை குறித்த
கனவெல்லாம்
நனவாகுமென்று
இரவு பகலாய்ஏங்கியதுண்டா...
நிம்மதியாய்தூங்கியதுண்டா?...

வேலையற்றவனின் 
வேதனை குரல்கள்
நிசப்தம் ஆகாத வரையில்
எப்படி நம்பமுடியும் 
சுதந்திரம் யென்பது
சுகப்பிரசவம் தானென்று...

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

இனியொரு முறை காதலிப்போம்

        


       எதிர்பார்க்காமலே சந்தித்து 
       கொண்டதாய் 
சொல்லிக் கொள்கிறோம்
மணிக்கணக்கில் காத்திருந்த
வலி மறைத்து...

பிடிக்காத யாவையும்
பிடித்துபோகின்றது-உனக்கு
பிடித்தவையெனும்போது...

தொட்டாசிணுங்கியாய் சட்டென்று
தலை திருப்பும்போதுதான்
தெரிகின்றது இவ்வளவு நேரம்
என்னை விழுங்கிய-உன் பார்வைகள்...

மணிக்கணக்கில் பேசுகின்ற
உதடுகள் ஊமையாகிபோகின்றன
விழியோடு விழிமோதும் நேரங்களில்...

மாமன்மகனோ அத்தைமகனோ
வீட்டுக்கு வந்தானென்று
சொல்லும்வேளைகளில்
வில்லன்களாய் மாறிப்போகிறார்கள்
முகமறியா முறைப்பையன்கள்...

ஆயிரம் வேளைகள் எனக்கிருந்தாலும்
ஒன்றுமற்றதாய் ஆகிவிடுகின்றது-நீ
அழைக்கும் பொழுதுகளில்....

சத்தமாய் ஒலிக்கும் குரல்கூட
மெல்லிதாய் போகின்றது
செல்லமாய் உன்னிடம்
செல்லில் பேசும்போது...

கடிதம் முதல் -மெயில் வரை
தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை
முழுமையாய் சுவீகரித்துக் கொள்கிறது
நமக்கான பகிர்தலில்...

தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால்
பக்கம்பக்கமாய் விளக்கம் தந்து
நண்பனென்று சொல்லும்போதுதான்
புரிந்துகொள்கிறேன்
காதலர்கள் நாமென்று...

உடல்மொழியாய் ததும்பிவழியும்
வார்த்தைகளற்ற மௌனத்தில்
கரைந்துபோகும் பொழுதுகளை
இச்சைகள் அற்ற
அன்பு வழிந்தோடும் உணர்வுகளின் வழியே
இதயத்தின் பரிசங்கள் நிரப்பி

இனியோருமுறை காதலிப்போம்...

சனி, 24 செப்டம்பர், 2016

புத்தாடைக் கனவு


யாரும்
கேட்காமலே
வந்துவிடுகின்றன பண்டிகைகள்
சந்தோசம் மறந்து
சடங்காக மாறிப்போகின்றது
கிள்ளி அழவைக்கப்பட்ட
குழந்தையாய் மாற்றிவிட்டது
பண்டிகை பற்றிய நினைவுகளை..

அவசர அவசரமாய்
அலுவல் முடித்து
வடையோடு காபியும்
வாங்கிகொடுத்து
நைசாய் கேட்டேன்
வட்டிக்கு கடன்
பாலபிசேகம் வாங்கிகொண்டு
அருள்பாலிக்கும் பகவானாய்
வடை தின்ற களிப்பில்
பார்க்கலாம்என்றபோது
மார்கழிப் பனியாய்
குளிந்துபோனது
கடன் கேட்ட மனசு...

மகன் கேட்ட ஜீன்சும்-டீ சர்ட்டும்
வாங்கி கொடுக்கையிலே
கரைந்து போனது
புத்தாடை பற்றிய கனவு
இருப்பினும்
ஒட்டாடை நானுடுத்தி
அவனுக்கு
புத்தாடை போட்டுப்பார்த்தேன்
சட்டென்று மறந்து போனது
பண்டிகைக்காய் வாங்கிய கடனும்
பழசை உடுத்திக்கொண்ட பண்டிகையும்...

சோறூட்டுகிறாள் தாய்

வருவோர் போவோர் எல்லாம் வழிப்பறிக்காரன் என்றாள் சோறூட்டும் தாய்